புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி லட்சுமி நாராயணன், அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை அமைந்தகரையில் அன்பில் மகேஸை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை நவ. 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புழல் சிறையில் அன்பில் மகேஸை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது ‘விரைவில் வெளியில் கொண்டுவருவதற்கான வேலைகளை கட்சி செய்யும். மனதை தளரவிட வேண்டாம்’ என ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காவலில் எடுக்க போலீஸார் முடிவு
இதற்கிடையே, அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அன்பில் மகேஸிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வருக்கு எதிராக கோஷம்
அன்பில் மகேஸை சிறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு கூடியிருந்த தொண்டர் ஒருவர், ‘கரூரிலேயே அவனைப் போட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?’’எனக் கோஷமிட்டார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அந்த நபர் குறித்து புழல் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், முதல்வர் குறித்து கோஷமிட்டதாகக் கூறப்படும் நபர் வேலூரைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டிடா சரவணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்
