சீமான் வீட்டு பாதுகாவலர் உள்ளிட்ட இருவர் ஜாமீன் கோரி மனு தாக்கல்: போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
161

சீமான் வீட்டில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக துப்பாக்கியுடன் கைதான பாதுகாவலர் உள்ளிட்ட இருவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீஸாருடன் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுபாகரையும், சீமான் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். அமல்ராஜ் வைத்திருந்த கைதுப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ‘அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீஸார் கைது செய்திருப்பதாகவும், போலீஸார் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின்கீழ் போலீஸார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவி்க்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு (மார்ச் 13) தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here