திருப்பதி அருகே உள்ள மதனபல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிய பின்னர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
மதனபல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை கொண்டு ஆய்வு செய்த போது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குலவர்தன் என்பவர், சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குலவர்தன் வீட்டில் ஆய்வு செய்தபோது சிறுமியின் சடலம் கிடைத்தது. இதையடுத்து குலவர்தன் கைதானார்.
இந்நிலையில் குலவர்தனை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கோஷமிட்டனர். ஆந்திர அமைச்சர்கள் அனிதா, லோகேஷ் ஆகியோர் தலையிட்டு, குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். அதன் பின்னர், குலவர்தனை போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கனசானிவாரிபல்லி ஏரியில் குலவர்தன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மதனபல்லி மக்கள் ஊர்வலமாக சென்று, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.














