மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மதுரை உருவாக்கப்பட்டது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை உள்ளிட்ட அன்றாட அடிப்படை, மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மாநகராட்சி மைய அலுவலகம் தலைமையில், ஐந்து மண்டல அலுவலகங்கள், 100 வார்டு அலுவலகங்கள் செயல்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு, பகலாக, மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அயராத உழைப்பால், மக்களுக்கு வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வந்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் நேரடியாக தட்டுப்பாடில்லாமல் விநியோகம் செய்யப்படுகிறது.