தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மறைந்த ‘தி இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ ராமசுப்பையர், திருவிக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த தமிழகத்தை சேர்ந்த தியாகிகள், இந்திய தேசிய ராணுவ வீரர்கள், குறிப்பாக, விடுதலைப் போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்த்ததில் முக்கிய பங்காற்றிய பத்திரிகைகளான ‘தி இந்து’ நாளிதழ் நிறுவனர் எஸ்.கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும நிறுவனர் ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பா.ஞானவேல், ஒருங்கிணைப் பாளர்கள் அப்துல் ஹாரிஸ், கதர் வெங்கடேசன், கதிரேசன், மாவட்டத் தலைவர் வெங்கட சாயி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, தியாகிகளின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பொன் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘நாட்டின் விடுதலைக்காக தங்கள் சொத்துகள், சுகவாழ்வைத் துறந்து, சிறைவாசம் அனுபவித்த தியாகிகளின் வாரிசுகள் பலர் இன்று போதிய வருமானம், குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து, வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும். தியாகிகள் பெறும் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கையாவது அவர்களது வாரிசுகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.



