தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய தேசிய மாணவர் படை (என்சிசி) அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது.
அதன் 76-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, போர் நினைவிடத்துக்கு வந்த லெப்டினண்ட் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளடக்கிய என்சிசி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார்.
என்சிசி கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் ஓர் அம்சமாக சென்னையை மையமாகக் கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழுவின், கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்றது.














