பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து குடியிருப்போர் சங்கங்களுக்கு பயிற்சி: மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை

0
313

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. டிசம்பர் வரையிலான இந்த மழைக்காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகளவில் மழையை பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகளவில் தண்ணீர்தேங்கி ஆண்டுதோறும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

தலைமை செயலர் ஆலோசனை: இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கும் விதமாக, தலைமைச் செயலர் முருகானந்தம் சில தினங்களுக்கு முன்னர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, குடியிருப்போர் சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால், மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளன.

பட்டியல் தயாரிப்பு: அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் சங்கங்களின் பட்டியலை தயாரித்து, அவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழி்ப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கான அறிவுறுத்தல்கள், மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பருவமழையின்போது வழக்கமாக பாதிக்கப்படும் எனகருதும் பகுதிகள், கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் முதல் நிலைமீட்பர்கள், பல்துறை அலுவலர்களை முன் கூட்டியே நிலை நிறுத்த தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதற்கான பணிகளையும் மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here