வியாசர்பாடி ஜீவா நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால், 35 நிமிடங்கள் வரை மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடம் முக்கியமானதாகும். இத்தடத்தில், நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நேற்று பிற்பகலில் திடீரென சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, ஆவடியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலும், இதன் பின்னால் சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலும் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், சிக்னல் பிரச்சினை தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்கள் போராடி சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை சரி செய்தனர். இதையடுத்து, மின்சார ரயில்கள் மீண்டும் சீராக இயங்கத் தொடங்கியது. இப்பிரச்சினையால், மின்சார ரயில் சேவை அரைமணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே, இவ்வழித் தடத்தில் பராமரிப்பு காரணமாக 65 ரயில் சேவைகள் ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இதுபோன்று அவ்வப்போது ஏற்படும் சிக்னல் பிரச்சினை காரணமாக ரயில் பயணிகள் மேலும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “வண்ணாரப்பேட்டை – வியாசர்பாடி ஜீவா நிலையம் இடையே ஏற்பட்ட சிக்னல் பிரச்சினை காரணமாக, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பிறகு, மின்சார ரயில் சேவை மீண்டும் சீரானது” என்றார்.














