வேலை முடிந்து வீடு திரும்பியபோது கோர விபத்து – 35 வயது என்ஜினீயர் பரிதாப உயிரிழப்பு!
குமரி மாவட்டம் குழித்துறை அருகே கல்லுக்கட்டியைச் சேர்ந்த விபின் (35), பெட்ரோல் பங்குகளில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று தக்கலை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பணியை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் குழித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். முளகுமூடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த டெம்போ மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து தக்கலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விபின் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக டெம்போ ஓட்டுநர் பார்த்தீபன் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த விபினுக்கு மனைவி, 6 வயது மகன் மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளனர். இளம் வயதில் குடும்பத் தலைவரை இழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
