வீட்டின் அருகே விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் திருநீர்மலை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை லட்சுமிபுரம் கிருஷ்ணா தெருவைச் சேர்ந்த தயாளன் மகன் யுவனேஷ் (10), கிருபாகரன் மகன் தேவதர்ஷன் (12), ரங்கநாதசாமி 2-வது தெருவைச் சேர்ந்த பூஜா (13), ரங்கநாதசாமி 1-வது தெருவைச் சேர்ந்த லால்சந்த் மகள் குஷி (13) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து பெற்றோர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களைத் தேடி வந்தனர். மேலும் காணாமல்போன குழந்தைகள் குறித்த தகவல்கள் அப்பகுதி வாட்ஸ்-அப் குழுக்களிலும் பகிரப்பட்டு, அவர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள திருநீர்மலை ஏரியில் 4 சிறார்கள் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்பு, மீட்புப் படையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.
விசாரணையில், பள்ளி விடுமுறை என்பதால் 4 பேரும் அருகிலுள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றிருக்கலாம் என்றும், அப்போது ஏரியில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகளின் உடல்களைப் பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரிகளில் பாதுகாப்பு
ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
