முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகில் சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ.2.32 கோடி மற்றும் ரூ.3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்ற பிரிவுபோலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டுக்கு டிஎஸ்பி பொன்ராம் தலைமையில் போலீஸார் சென்றனர், மூர்த்தியிடம் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான கடிதத்தை வழங்கிவிட்டு தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர்.
சட்டவிரோதமாக செம்மண், கற்களை வெட்டி எடுத்த குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். மேலும் பாலமேடு பகுதியில் பி.மூர்த்தி கிரஷர் ஜல்லி தொழிற்சாலை நடத்துவதால், அதற்கு சட்டவிரோதமாக கற்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உறவினர்கள் தன்ராஜ், அலங்காநல்லூர் பொன்ராம், பூவந்தி பகுதியில் அவரது மைத்துனர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். இதையொட்டி மூர்த்தியின் வீட்டில் ஏராளமான திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
