Home மாநில செய்திகள் நான்கு வழி மேம்பால சாலை பணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: மே 4...

நான்கு வழி மேம்பால சாலை பணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: மே 4 வரை நீட்டிப்பு

0

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான அண்ணா சாலை பகுதியில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழி மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, பணி நடைபெறும் இடங்களில் கடந்த 20 முதல் 22-ம் தேதிவரை வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதாவது, தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடைய ஏற்பாடு செய்யப்பட்டது.

சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டன. அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடைய வசதி செய்யப்பட்டது.

ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. மேலும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒருவழிப் பாதையாக இருந்தது. அண்ணா சாலையிலிருந்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அண்ணா சாலையிலிருந்து செனடாப் 1-வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் செனடாப் 1-வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.

கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையும்படி செய்யப்பட்டது.

சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அண்ணா சாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைசெய்யப்பட்டது. நான்கு வழி சாலைக்கான மேம்பால கட்டுமான பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால், இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version