போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் கோரிக்​கைகளை பட்​ஜெட் கூட்டத்தில் பேசி முடிவு காண தொழிற்​சங்​கத்​தினர் வலியுறுத்​தல்

0
150

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசி முடிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் நேற்று கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.

அங்கு, பாடிகாட் முனீஸ்வரர் கோயில் அருகிலிருந்து பேரணியை சங்கங்களின் தலைமை நிர்வாகிகள், கே.ஆறுமுகநயினார், சசிக்குமார், வி.தயானந்தம், கனகராஜ், நந்தாசிங், முருகராஜ், திருமலைச்சாமி, ராஜாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேரணியை தொடங்கி வைக்க, அவரது தலைமையில் தொழிலாளர்கள் அணிவகுத்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, பேரணியை பல்லவன் இல்லம் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், காவல்துறை அறிவித்தபடி தொழிற்சங்கத்தினர் சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து செயலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் சவுந்தரராஜன் கூறியதாவது: வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும். மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியின் காரணமாக கடுமையான போராட்டங்களுக்கு செல்லாமல் உள்ளோம். இதை பலவீனமாக கருதினால், அதற்கான பதிலை தருவோம்.

மத்திய அரசு பணம் தரவில்லை என்று மாநில அரசு கேட்பது நியாயமானது. தமிழகமே அரசின் பின்னால் நிற்கிறது. அதேபோன்று மாநில அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, அவர்களது பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் உள்ளோம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்? போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here