குறைந்த முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி டோரஸ் பொன்சி திட்டத்தில் 3,700-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ. 57 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டதாக மும்பை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது பணமோசடி நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், மும்பை மற்றும் ராஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் 10-12 இடங்களை குறிவைத்து அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
டோரஸ் பிராண்டின் உரிமையாளரான நகை நிறுவனம், பொன்சி மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்எல்எம்) ஆகிய இரண்டும் இணைந்த திட்டங்களின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்த தொகை நிறுத்தப்பட்டதால் மேற்கு தாதரில் உள்ள டோரஸ் வாஸ்து சென்டர் முன்பு கடந்த மாதம் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.














