தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 மெயின் தேர்வுகள் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெறுவதாக இருந்தன.
ஆனால், அன்று காலையில் சென்னையில் 3 தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டதால் அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மெயின் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடி விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையை தொடர்ந்து 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு அப்பதவிக்கு பி.ஸ்ரீ வெங்கட பிரியா நியமிக்கப்பட்டு அவர் கடந்த 14-ம் தேதி பொறுப்பேற்றதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.














