நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம், ராஜாகிளி. அவரது மகன் உமாபதி ராமையா திரைக் கதை அமைத்து இயக்கி இருக்கிறார். ‘மிக மிக அவசரம்’, ’மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். டிச.13-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் அர்ஜுன், சமுத்திரக்கனி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தம்பி ராமையா பேசும்போது, “நான் குணச்சித்திர நடிகன். ‘வினோதய சித்தம்’ என்ற படத்தை எனக்காகவே உருவாக்கி, போகிற, வருகிற இடங்களில் எல்லாம் என்னைக் கொண்டாட வைத்தவர் சமுத்திரக்கனி. அவர் என்னை வைத்து அந்தப் படத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ‘ராஜா கிளி’யை உருவாக்கியிருக்க முடியாது. உயரத்தில் இருக்கும் பல பேர் இன்று துயரத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தக் கதை எதையும் உணர்த்தாது. உணர வைக்கும்” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “யாருக்கு எதை, எந்த சூழ்நிலையில் கொடுக்க வேண்டும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். எல்லாமே காலம் முடிவு செய்வதுதான். இதை நான் மிகவும் நம்புகிறேன். நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று இந்த ‘ராஜா கிளி’. காலத்திடமிருந்து பதில் சொல்லாமல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துவிடவே முடியாது. அதனால் முடிந்தவரை உண்மையாக இருங்கள். எளிமையாக இருங்கள். காலம் நம்மைக் கைபிடித்துத் தூக்கிச் செல்லும் என்பது தான் இந்த படத்தின் கதை” என்றார்.














