டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் அணியுடன் மோதியது.
இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்று தொடரை நிறைவு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக லக் ஷயா சென் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.பிரனாய் விளையாடினார். முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 11-21, 9-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்தார்.
4-வது முறையாக இதைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16- 21, 18- 21 என்ற செட் கணக்கில் 10-ம் நிலை வீரரான அலெக்ஸ் லானியரிடம் வீழ்ந்தார். இதன் பின்னர் 3-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், தோமா ஜூனியர் போபோவுடன் மோதினார். இதில் ஹெச்.எஸ்.பிரனாய் 19- 21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தாமஸ் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும். கடந்த 1952, 1955 மற்றும் 1979ம் ஆண்டுகளிலும் இந்தியா வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தது.
