கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நவம்பர்–டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ‘தோடு’ எனப்படும் சிப்பிகள் சேகரிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் நேற்று முதல் கடலில் சிப்பிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூச்சுப் பயிற்சி பெற்ற மீனவர்கள் கடலில் மூழ்கி, நீருக்கடியில் உள்ள பாறைகளில் ஒட்டியிருக்கும் சிப்பிகளைச் சேகரித்து வருகின்றனர்.
குளச்சல் ஏலக்கூடத்தில் சுமார் 1,500 சிப்பிகள் கொண்ட ஒரு பெட்டி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. கேரளாவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கூடங்களில் இந்த வகை சிப்பிகளுக்கு அதிக தேவை இருப்பதால், கேரள வியாபாரிகள் குளச்சலுக்கு நேரடியாக வந்து சிப்பிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதற்கிடையே, ஓகி புயலுக்குப் பிறகு கடலில் சிப்பிகளின் வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல விலை கிடைத்தாலும், குறைந்த அளவே சிப்பிகள் கிடைப்பதால் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால், இந்த ஆண்டு முதல் ஒரு மீனவர் நாளொன்றுக்கு ஒரு பெட்டி சிப்பி மட்டுமே சேகரிக்க வேண்டும் என மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.