நான் தேசிய விருது வாங்கியதும் என் குடும்பம், பத்திரிகையாளர்களைத் தவிர சினிமா துறையில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கமல் அண்ணாவிடம் இருந்துதான். அவர் போனில் வந்ததும், “என்ன நடந்துட்டு இருக்கு?” என்றார். “கிராண்ட் ஃபாதர்’ங்கற படத்தோட ஷூட்டிங்ல இருக்கேன்; நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு” என்றேன்.
அவர், “ஏன்?” என்றார். “ஏன் எனக்கு கொடுத்தாங்கன்னு கேட்கிறீங்களா?” என்று கேட்டேன். “ஏன் இவ்வளவு லேட்டா கொடுத்தாங்கன்னு கேட்கிறேன்” என்றார். “இப்பதான் என்னையும் நடிகன்னு ஒப்புக்கிட்டாங்க. உங்களோட சேர்ந்து நடிச்சதால பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்ங்கற மாதிரி…” என்றேன்.
அவர், “நானும் நார்தான். பூவுன்னா சீக்கிரம் வாடி போயிரும். நார்னா கடைசி வரை எதையாவது கட்டி கூட எடுத்துக்கிட்டு போகலாம்” என்றார். என்ன ஒரு கற்பனை என்று வியந்தேன். அவருடன் ‘பாபநாசம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எப்படி கிடைத்தது என்றால், ஏவி.எம் கார்டன் தியேட்டரில் அண்ணாவை பார்க்க இயக்குநர் ஜீத்து ஜோசப் வந்தார்.
அவரிடம் என்னை காட்டி ‘இவரு திருநெல்வேலி ஸ்லாங் நல்லா பேசுவார்” என்று சொன்னதும் அண்ணாவின் அந்த ஒரே சொல்லுக்காகவே அந்தப் படத்தில் டீ கடை பாய் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடுபுழாவில் போய் நடித்தோம். அங்கு கமல் அண்ணா வந்துவிட்டால் நான் போய் கார் கதவைத் திறப்பேன்.
கீழே இறங்கியதும் வணங்குவேன். படப்பிடிப்பு முடிந்து அவர் செல்லும்போது கார் கதவை நான்தான் மூடுவேன். வேண்டாம் என்று யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். இது நான் நேசிக்கக் கூடிய மிகப்பெரும் கலைஞனுக்கு, கலைஞானிக்கு நான் செய்யும் பணிவிடை என்று எடுத்துக்கொள்ளலாம்.
‘பாபநாசம்’ படத்தில் பாய் கதாபாத்திரத்துக்காக அது போன்ற கெட்டப்பில் நான் நின்றதும் என்னை அப்படியே பார்த்தார், “சலாம் அலைக்கும்” என்றார். நான் உடனே “வாஹ் அலைக்கும் சலாம்” என்றேன். “ஓஹோ… பாய் கேரக்டர்னா எல்லாத்தையும் படிச்சிருவியா?” என்று சொன்னார்.
“இதெல்லாம் உங்களைப் பார்த்து கத்துக்கிட்டதுதான்” என்றதும் என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டு சென்றார். இப்படி அவருக்கும் எனக்குமான நெருக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் அண்ணா, என் குருநாதர் கே.பாலசந்தர் சார், கே.விஸ்வநாத் சார், தங்கை ஊர்வசி…
இவர்களின் காம்பினேஷனில் நான் நடித்தது எவ்வளவு பெரிய பாக்கியம்? அதன் படப்பிடிப்பில் கே.பாலசந்தர் ஐயாவிடம் “ஒழுங்கா நடிக்கிறேனா?” என்று கேட்டேன். முதுகில் தட்டி, “போடா படவா” என்றார். கே.விஸ்வநாத் சாரும் டப்பிங் தியேட்டரில் பார்த்துவிட்டு, தெலுங்கில் பேசி பாராட்டினார்.
இதுபோல கமல் அண்ணாவால் எனக்குக் கிடைத்த பெயரும் பெருமையும் அவரையே சேரும். அவரின் தமிழ் மொழி புலமையும் வளமையும் எப்போதும் என்னை வியக்க வைக்கும். ‘உத்தமவில்லன்’ டப்பிங் நடக்கும்போது என் மகள் ஐஸ்வர்யா அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு பேசியிருந்தார்.
அவர், கமல் அண்ணாவைப் பார்த்ததும் நமஸ்காரம் செய்தார். “இருக்கட்டும் இருக்கட்டும்” என்றார் அண்ணா! “என்னண்ணா இருக்கட்டுங்கறீங்க. சின்ன வயசுல இருந்தே பெரியப்பான்னு சொல்லி வளர்த்திருக்கேன். இது என் பொண்ணு” என்றதும் “அப்படியா வா வா” என்று அருகில் அழைத்தார்.
அப்போது மகள், “அப்பா ஒரு போட்டோ எடுங்க” என்றார். நான் எடுத்தேன். மகள், “இன்னொரு முறை எடுங்க. ஷேக்காகிவிட்டது” என்றதும், ‘நீங்க போனை கையாடல் (கை ஆடல்) பண்ணிட்டீங்க” என்றார் கமல் அண்ணா. கையாடல் என்பது திருட்டு என்ற ஒரு பொருளைத் தருகிறது.
கை ஆடுகிறது என்ற பொருளும் இருக்கிறது. இப்படி அவர் பேசுவதை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவருடன் நடிக்கும்போது நிறைய சந்தேகங்கள் கேட்கலாம். அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம். ஒருமுறை ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அது லைவ் டெலிகாஸ்ட்.
அவரிடம் நேயர்கள் கேள்வி கேட்கலாம். நான் அந்த எண்ணுக்குப் போன் பண்ணினதும் கிடைத்துவிட்டது. “நான் பாஸ்கர் பேசறேன்” என்றதும், “சொல்லு பாஸ்கர்” என்றார். “எப்போதுமே இளமையாகவே இருக்கீங்களே எப்படி?” என்று கேட்டேன்.
அதற்கு, “உங்களை மாதிரி இருக்கிறங்க கொடுக்கிற ஆதரவும் அன்பும்தான் காரணம்” என்று சொன்னார். அடுத்த கேள்வி என்றதும், “அதற்கு முன்னால், உன்னைப் பற்றிச் சொல்வதற்கு இந்த மேடையை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த பாஸ்கர் என்கிற தம்பியை, அவருக்கு 15 வயதாக இருக்கும்போதிருந்தே தெரியும்.
பிறகு தொடர்பில் இல்லை. டப்பிங் ஆர்ட்டிஸாகி, என் படங்களிலும் பேசியிருக்கிறார். தசாவதாரம் படத்தில் என்னுடன் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் செட்டில், தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்குத் தெலுங்கு தெரியும் போலிருக்கு என்று நினைத்தேன்.
சிறிது நேரத்தில் சுத்தமான மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார். தென்னிந்திய மொழிகள் தெரியும் என்று நினைத்தேன். பிறகு ‘தசாவதாரம்’ இந்தி டப்பிங்கிலும் அவரே போய் பேசிவிட்டு வந்தார். எனக்குப் பெருமையாக இருந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னில் பாதி இந்த தம்பி” என்றார்.
எனக்கு கண் கலங்கிவிட்டது. பிறகு ஒரு பத்திரிகையிலும் என்னை பற்றி சொல்லி இருந்தார். “ரங்காராவ் இல்லை, சுப்பையா இல்லைன்னு வருத்தப்படறோமே இன்னைக்கு. இந்த எம்.எஸ்.பாஸ்கர் இருக்கார். எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிப்பார்.
ஒரு கலைஞனை இருக்கும்போதே நல்ல வேடங்கள் கொடுத்து கவுரவித்தால், அவர் இறப்புக்குப் பிறகு வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார். அவரை நேராகச் சந்தித்தபோது, “என்னைப் பற்றி இப்படி சொல்லிருக்கீங்களே, ரொம்ப நன்றிண்ணா” என்றேன். “உண்மையைதான சொல்லிருக்கேன்” என்றார்.
எப்போது என்னைப் பார்த்தாலும் வாஞ்சையோடு பேசுவார், அன்பாக விசாரிப்பார். தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொள்ள முடியும். அவருக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது. நான் நேசிக்கிற மிகச்சிறந்த கலைஞானி. நான் கண்ட கலைக்கடவுள் அவர்.
அவருடன் இணைந்து தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. சிவாஜி அப்பா மீது நான் எவ்வளவு பெரிய வெறியனோ, அந்தளவுக்கு கமல் அண்ணாவும் சிவாஜி அப்பா மீது வெறியர். சிவாஜி அப்பா, கமல் அண்ணா மீது நானும் வெறியனாக இருக்கிறேன். இருப்பேன்.











