திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகா சந்நிதானத்துக்கு குருபூஜை விழா

0
222

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது குருமகா சந்நிதானத்துக்கு நேற்று 12-ம் ஆண்டு குருபூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறையில் பழமைவாய்ந்த சைவ திருமடங்களுள் ஒன்றான, திருவாவடுதுறை ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 23-வது குருமகா சந்நிதானமாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1983 முதல் 2012-ம் ஆண்டு வரை ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வந்தார். இவர், 2012-ம் ஆண்டு பரிபூரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் கார்த்திகை சதய திருநாளில் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் குருமூர்த்தத்தில் குருபூஜை விழா நடைபெறும்.

நிகழாண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, திருவாவடுதுறை மறைஞான தேசிகர் தபோவனத்தில் உள்ள சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் குருமூர்த்தத்தில் நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளை நடத்தி வைத்தார். இதில், ஆதீன கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட அடியார்கள் பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

குரு பூஜை விழாவையொட்டி, உமாபதி தேவநாயனார் அருளிய சிவப்பிரகாசம்- உரை நடை(விளக்க குறிப்புகளுடன்), பதி, பசு, பாசம் ஓர் எளிய விளக்கம், பூசை ஆட்சிலிங்கம் தொகுத் தளித்த திருமந்திரம் நவாட்கரீ சக்கரம் ஆகிய 3 நூல்களை ஆதீன கர்த்தர் வெளியிட்டார். தொடர்ந்து, சமய சொற்பொழிவு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here