பத்மனாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றிய பகுதி அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
பொதுமக்கள் பல மனுக்கள், பல போராட்டங்கள் நடத்தினும் தமிழ்நாடு அரசும் பொதுப்பணித்துறையும் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த பாலத்தின் வழியே நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் ஓட்டை வழியே கால் முழுவதும் உள்ளே சென்றது. மூதாட்டி அலறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் உடனே காப்பாற்றினார்கள். அதுபோல் 17-11-2024 அன்று இந்த பாலத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுவன் இந்த ஓட்டையின் உள்ளே கால் சென்று உடல் முழுவதும் உள்ளே சென்று தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். பொதுமக்கள் உதவியால் உடனே அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.
இன்னும் எத்தனை பேரை இந்த பாலம் காவு வாங்க துடிக்கிறதோ என்று பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர். சேதமடைந்த இந்த இரும்பு பாலத்தை உடனே சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.