தேர்தல் அரசியலுக்காக திமுகவிடம் அடமானம் வைத்து, விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கலைத்து விட வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதி என்ற பெயரால் தமிழ் சமுதாயத்தை தேர்தல் கலக்சன் அரசியலுக்காக குத்தி கிழித்து, சீரழித்துக் கொண்டிருக்கும் திருமாவளவன், இனி வேல் பிடித்து வீதி வீதியாக திரிந்தாலும் அலகு குத்தி ஆர்ப்பரித்தாலும், காவடி தூக்கி கர்ஜித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
திமுகவின் மாணவர் அணியில் இருந்து, திமுக பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி என்பதை உணர்ந்து விடுதலை சிறுத்தைகள் என்ற தனிக்கட்சி தொடங்கி பட்டியல் இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறேன் என்றும் பட்டி தொட்டி எங்கும் பேசி நீண்ட காலமாக தேர்தல் அரசியலுக்காக செய்த மோசடி தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்கும் எதிரான வகையில் பட்டியலின மக்களின் வாழ்வுரிமையை திமுகவிடம் அடமானம் வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக பற்றி பேச தகுதி இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது மறக்கடிக்கப்பட்டு விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று பட்டியலின மக்களே விமர்சிக்கும் வகையில், கொள்கை, கோட்பாடு இல்லாமல் பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக எந்தவித தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல், புதிய புதிய பெயர்களில் மாநாடு போட்டு பட்டியல் இன மக்களை பொய்யான வீர வசனங்கள் பேசி ஒருங்கிணைத்து இரண்டு சீட்டுகளுக்காக வியாபாரம் பேசி விற்கும் திருமாவளவனுக்கு மற்ற கட்சிகளுக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் அறிவுரை சொல்ல தகுதி இல்லை.
பட்டியலின தலைவர்கள் படுகொலை, கழிவு நீரில் மலம் கலக்கப்பட்ட வேங்கைவயல் பிரச்சனை முதல் தொடரும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவங்கள் மற்றும் கடந்த வாரம் திருவள்ளூரில் ஏழாம் படிப்பு படிக்கும் பட்டியல் இன மாணவன் பள்ளி சுவர் விழுந்து பலி, என எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காமல் திமுகவின் அடிமையாக இருந்து தொண்டர்களையும் ஏமாற்றும் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து விடுவதே நல்லது.
பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற திமுக அரசின் தவறுகளை அநியாயங்களை அக்கிரமங்களை திருமாவளவன் இதுவரை கண்டிக்காதது ஏன்? மத்திய அரசு ஆண்டுதோறும் தமிழகத்தின் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கிய நிதியை திராவிட மாடல் அரசு தேர்தல் அரசியலுக்காக வாக்கு வங்கி அரசியலுக்காக திருடி கொண்டதை ஏன் தட்டிக் கேட்கவில்லை?
பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களுக்குப் பெருமளவில், நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் 2021-2022 ஒரு ஆண்டிலேயே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, 2022-23 நிதி ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தகவலின்படி மத்திய அரசு தமிழகத்தின் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய 16,442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு 10,466 கோடி ரூபாய் செலவிடாமல் இருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ஏறத்தாழ 1,450 கோடி ரூபாய் நதி திசை திருப்பி மகளிர் உரிமைத்தொகை என வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை சரிவர வழங்கப்படாமல் இருக்கிறது. ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை.
கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருக்கும் திமுக அரசுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை திருமாவளவன் நடத்தி இருக்கிறார்?
சீமான், நடிகர் விஜய் இருவரிடமும் திமுகவின் தூண்டுதலின்படி திரை மறைவு பேரத்தில் ஈடுபட்டு திமுகவின் ஊது குழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருமாவளவன், இருவரையும் விமர்சிப்பது போல் நாடகமாடி, மூன்று பேரும் இணைந்து பிராமணர்களை பாராட்டுவது பிராமணியத்தை எதிர்ப்பது, சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறி முருகனின் வேலை கையில் பிடித்து ஓட்டு அரசியல் செய்வது, கிறிஸ்தவ இஸ்லாமிய சகோதரர்களை இந்து மக்களிடம் இருந்து பிரித்து மதவெறி அரசியல் செய்த திமுகவை வெற்றி பெற வைக்கும் நாடக அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







