தனது வரலாற்றை மதிக்காத எந்தவொரு நாடும் தனக்கென ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறினார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதம் பற்றி காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியதாவது: நமக்கு புத்திசாலித்தனம் இருக்கலாம், திறமை இருக்கலாம், வளங்கள் இருக்கலாம், நாகரிக வரலாறு ஏராளமாக இருக்கலாம், ஆனால் நாம் ஊக்குவிக்கப்படவில்லை என்றால் இந்த தலைமுறையில் நாம் அதிக தூரம் செல்ல மாட்டோம். இது அடுத்த தலைமுறையை கடுமையாக முடக்கிவிடும்.
நாம் நம்மை வளரும் நாடு என்று அழைக்கிறோம். 2047-க்குள் நாம் வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்ற திட்டம் நம்மிடம் தற்போது உள்ளது. ஒரு திட்டம் என்றால் அதற்கு உத்வேகம் தேவை. எந்த உத்வேகமும் இல்லையென்றால், திட்டத்தை யார் நிறைவேற்றுவார்கள்?
வளர்ந்த இந்தியா திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். என்றாலும் முழு தேசமும் அந்த திட்டத்தை ஆதரித்து அதற்கு வடிவம் கொடுத்திட பாடுபடுவது அவசியம். இவ்வாறு சத்குரு கூறினார்







