செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூறிய பிறகே, அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை தான் முன்னெடுத்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் அதிமுகவை ஒன்றிணைக்கச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த 6 போ் யார் என்று தெரியவில்லை. பாஜகவில் யாரிடம் சென்று கூறினார்கள் என்பதையும் செங்கோட்டையன் கூறவில்லை. எனவே, இதுகுறித்து நான் கருத்து கூறினால் தவறாகப் போய்விடும். ஏற்கெனவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். எனவே, செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியிலும் திமுக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாராவது நம்புவாவர்களா? – பாஜக பெரிய கட்சி. ஆனால், நடிகர் விஜய் இன்னும் கவுன்சிலர்கூட ஆகவில்லை. கட்சி தொடங்கிய உடனேயே எங்களுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என கூறுகிறார். இதை யாராவது நம்புவாவர்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.














