தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் ஒரு நிரபராதியின் மொத்த குடும்பமும் சிதைந்து போவதுதான் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘த ராங் மேன்- 1956’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. நியூயார்க் நகரின் ஸ்டார்க் கிளப்பில் ‘ஸ்ட்ரிங் பேஸ்’ இசைக் கருவியை வாசிக்கும் கலைஞன், கிறிஸ்டோபர் இமானுவேல் மேனி பேலெஸ்ட்ரேரோ, கச்சேரியை முடித்துவிட்டு ஒரு ரயிலில் பயணிக்கிறான். கையில் இருக்கும் பேப்பரில், ரேஸ் பகுதியை வட்டமிடுகிறான்.
வீட்டுக்கு வந்தால் மனைவியும், இரு மகன்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனைவி ரோஸ் எழுந்து விடு கிறாள். அவளுக்கு சில நாட்களாகப் பல் வலி. டாக்டர் சொன்ன பீஸ், பல்லைவிட வலிக்கிறது.
நான்கு பற்களைச் சரி செய்ய 300 டாலர் கேட்டிருக்கிறார். வாரத்துக்கு 85 டாலர் சம்பளம் வாங்கும் பேலெஸ்ட்ரேரோவுக்கு இது பெரும்தொகை. அடுத்தநாள் வங்கிக்குச் சென்று மனைவியின் இன்சூரன்ஸ் பாலிசியில் கடன் கேட்கிறான். அவனைப் பார்த்ததும் வங்கி காசாளரான அந்தப் பெண் ஷாக் ஆகிறாள்.
சக ஊழியரிடம் “சத்தம் போடாம மெதுவா திரும்பி பாரு” என்று பேலெஸ்ட்ரேரோவைக் காட்டுகிறாள். அவள் சின்ன அதிர்ச்சியுடன் இன்னொரு பெண்ணிடம் காட்ட, “அவன்தான்” என 3 பேரும் மெதுவாகப் பேசிக் கொள்கிறார்கள். பிறகு ‘`உங்க மனைவி வந்தா லோன் கிடைக்கும்’’ என்று அனுப்பி விட்டு போலீஸுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
பேலெஸ்ட்ரேரோ வீட்டுத்திரும்பி, படியேறும் முன், 2 டிடெக்டிவ்கள் அவனை காரில் ஏற்றுகிறார்கள். இன்சூரன்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, நியூயார்க் நகரின் வேறு பகுதியில் நடந்த சில கொள்ளைச் சம்பவங்களிலும் அவனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுகிறார்கள். சில கடைகளுக்கு அழைத்துச் சென்று “சும்மா கடைசிவரைக்கும் போயிட்டு வாங்க” என்று அனுப்புகிறார்கள். பேலெஸ்ட்ரேரோ குழப்பத்துடன் கடைகளுக்குள் ‘கேட்வாக்’ சென்று திரும்புகிறான்.
பேப்பர் பேனா கொடுத்து ஒரு வாசகத்தை ‘டிக்டேட்’ பண்ணுகி றார்கள். நம்ப முடியாத ஒற்றுமை! குற்றவாளி ‘டிராயர்’ என்று எழுதுவதற்குப் பதில் ‘டிரா’ என எழுதியதுபோல் பேலெஸ்ட்ரேரோவும் எழுதி இருக்கிறான். ‘ஐடென்டிஃபிகேஷன் பரேட்’டில் பல குற்றவாளிகளுக்கு மத்தியில் மூன்று பெண்களும் பேலெஸ்ட்ரேரோவை அடையாளம் காட்டுகிறார்கள். போதாதா? ஒன்றுமே புரியாமல் கைதாகிறான்.
அடுத்த நாள் நீதிமன்றம் வந்த ரோஸைப் பார்த்து பேலெஸ்ட்ரேரோ ஃபீல் பண்ணுகிறான். அவரை தங்கையின் கணவர் பெயிலில் எடுக்கிறார். வழக்கில் வாதாட ‘பிராங்க் ஓ கானர்’ என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறார்கள். “குற்றம் நடந்த நாட்களில் எங்கே இருந்தீர்கள்? என்பது சாட்சியத்தோடு வேண்டும்” என்று அவர் கேட்கிறார்.
முதல் குற்றம் நடந்தபோது விடுமுறைக்காக சென்ற இடத்தில் 3பேருடன் சீட்டாடியது ஞாபகம் வருகிறது. ரோஸும், பேலெஸ்ட்ரேரோவும் அவர்களைத் தேடிச் செல்ல, 2 பேர் இறந்திருக்கிறார்கள். ஒருவர் மாயம்! எங்கு அலைந்தும் சாட்சிகள் கிடைக்காத விரக்தியில் ரோஸ் ‘லகலகலக’வென சிரிக்கிறாள்.
‘என்னாலதான் அவருக்கு இப்படி ஆயிருச்சு’ என்று நிலைகுத்திய பார்வையுடன் ரோஸ் பேச, வழக்கறிஞர் அவளது நடவடிக்கையின் விநோதம் உணர்ந்து மருத்துவரைப் பார்க்கச் சொல்கிறார். 2 நாளாக ரோஸ் தூங்கவில்லை.
பேலெஸ்ட்ரேரோ டாக்டரைப் பார்க்கலாம் என்று அழைக்க, அவனிடம் வாக்குவாதம் செய்த ரோஸ், ஒரு பெரிய மரச் சீப்பால் அவன் தலையில் அடிக்கிறாள். பேலெஸ்ட்ரேரோவுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. ரோஸை பரிசோதித்த டாக்டர் ‘மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள்’ என்று சொல்ல, பேலெஸ்ட்ரேரோ அதிர்ச்சியடைகிறான். ரோஸ் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நடைப் பிணமாகிறாள்.
ஒருவழியாக, உண்மைக் குற்றவாளி சிக்கி, பேலெஸ்ட்ரேரோ நிரபராதி என விடுவிக்கப்படுவதுதான் கிளைமாக்ஸ். சரியாகத் திட்டமிட்டு வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கை, தவறான அடையாளம் காட்டுதலால் தடம் மாறுகிறது. அவன் விடுதலையானாலும் அவன் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? படம் முடிந்ததும் எழும் மிகப் பெரிய கேள்வி இது.
படத்தின் ஆரம்பத்தில் ஹிட்ச்காக் திரையில் பேசுகிறார். “நான் இதுக்கு முன்னாடி வித விதமான சஸ்பென்ஸ் படங்கள் கொடுத்திருக்கேன். இந்த தடவை உண்மைக் கதையை எடுத்திருக்கேன். இதில் இருக்கும் விஷயங்கள் இதுக்கு முன்னே எடுத்த புனைகதைகளை விட, ரொம்ப விநோதமா இருக்கு” என்கிறார்.

