ஐமேக்ஸ் என்பது இமேஜ் மேக்ஸிமம் எனப்படும் பெரிய திரையைக் கொண்ட திரையரங்க வடிவம். திரையின் அகலத்தை விட உயரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட, முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அமைப்பு.
திரையரங்கக் கட்டமைப்பு, திரை வடிவமைப்பு, அதிநவீன இரட்டை புரொஜெக் ஷன் தொழில்நுட்பம், துல்லியமான ஒலி அமைப்பு, கதை சொல்லும் கேமரா மொழி, படமாக்கும் முறை (கேப்சர்), நவீன மாற்றுச் செயல்முறை (மாஸ்டரிங்), மற்றும் வெளியீட்டுத் திட்டமிடல் (ரிலீஸ் ஸ்ட்ரேட்டஜி) ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறது ஐமேக்ஸ் நிறுவனம்.
பிரம்மாண்டமும் வடிவமைப்பும்: இவ்வகைத் திரையரங்குகளின் தனித்துவமே அதன் பிரம்மாண்டமான பரிமாணங்கள் தான். ஐமேக்ஸ் திரையின் சராசரி உயரம் 60 முதல் 70 அடிகள் வரை இருக்கும். பாரம்பரிய வைடு ஸ்கிரீன் வடிவங்கள் அகலத்தை மட்டுமே வலியுறுத்தும் போது, ஐமேக்ஸ் காட்சியில் உயரம் வியத்தகு அளவில் அதிகரிக்கப்படுகிறது.
இதனால் வானம், கட்டிடங்களின் முழு நீளம், மனித உருவங்கள் மற்றும் நிலப்பரப்பின் அளவு ஆகியவை முழுமையாகக் காட்சிக்குள் வருகின்றன. பார்வையாளரின் பக்கப் பார்வை வரை காட்சி நிரம்புவதால், இந்தத் திரை அனுபவம் முற்றிலும் முழுமையாக உணரப்படுகிறது. ஐமேக்ஸ் திரையரங்குகள் ஸ்டேடியம் சீட்டிங் முறையில் வடிவமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வரிசையும் படிப்படியாக உயர்ந்து, பார்வையாளரின் கண் பார்வை இயல்பாகவே திரையின் மையத்தை நோக்கியே அமைகிறது. ஐமேக்ஸ் ஒலி அமைப்பும் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஒலி அமைப்பு, சாதாரண திரையரங்க ஒலிப்பதிவை விட 5 மடங்கு அதிக ஒலித்திறனைக் கொண்டிருக்கும்.

