கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இம்முறை திமுக வெற்றிபெற வேண்டும். அதிலும் குறிப்பாக, மதுரை மேற்கு தொகுதியின் வெற்றி முக்கியமானது” என்று அமைச்சர் பி.மூர்த்தியிடம் அழுத்தமாகக் கூறிச் சென்றார். இதற்காகவே மாநகர திமுக செயலாளர் தளபதியின் ஆளுகைக்குள் இருந்த மேற்கு தொகுதியை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான பி.மூர்த்தியின் எல்லைக்கும் மாற்றினார்.
இதையடுத்து இம்முறை மதுரை மேற்கில் சூரியனை உதிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் முடுக்கிவிட்டு வருகிறார் அமைச்சர் மூர்த்தி. மதுரை மேற்கில் 2001 முதல் தொடர்ச்சியாக வாகை சூடி வருகிறது அதிமுக. தற்போதும் இந்தத் தொகுதி எதிர்க்கட்சியான அதிமுக வசமிருந்த போதும் இந்தத் தொகுதிக்கு இதுவரையிலும் சுமார் 800 கோடி ரூபாய்க்கான திட்டங்களை மூர்த்தி கொண்டு போய்ச் சேர்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். அத்துடன் இந்தத் தீபாவளிக்கு இந்தத் தொகுதியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களுக்கு வேட்டி – சட்டை சகிதம் கைச்செலவுக்கு பணமும் கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் மூர்த்தி.
இதேபோல் இந்தத் தொகுதிக்குட்பட்ட கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் ‘கவனிப்பு’ மழை பொழிந்து வருகிறார் மூர்த்தி. மேற்குத் தொகுதி வாக்காளர்களையும் மகிழ்விக்க வீடு தேடி அன்பளிப்புப் பொருட்களையும் அனுப்பி வருகிறது மூர்த்தி அண்ட் கம்பெனி. அத்துடன் நில்லாது வாரா வாரம் ஏதாவது கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கிடா விருந்துகளை வைத்து அதிமுகவினரை அரட்டிக் கொண்டிருக்கிறார் மூர்த்தி.
இதையெல்லாம் பார்த்துவிட்டு சற்றே ஜெர்க் ஆகிக் கிடக்கும் மேற்கு தொகுதி எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “இந்த முறை மதுரை மேற்கிற்குப் பதிலாக தெற்கில் நிற்கட்டுமா?” என இபிஎஸ்ஸிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள். அவரோ, “சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அவரவர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும்; தொகுதி எல்லாம் மாற்றிக்கொடுக்க முடியாது” என கட் அண்டு ரைட்டாக சொன்னதாகத் தெரிகிறது.
இதனால் வேறுவழியில்லாமல் ராஜுவும் தனது தொகுதிக்குள் இப்போது தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தொகுதியை சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார். தொகுதிக்குள் சின்னதாய் ஒரு பிரச்சினை என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அழைக்காமலேயே ஓடோடிச் சென்று பாசக் கரம் நீட்டி வருகிறார். இந்த தொகுதியில் அதிமுகவுக்கென பாரம்பரியமான வாக்கு வங்கி உள்ளதால் மூர்த்திக்கு டஃப் கொடுக்க ராஜுவும் இப்போது தயாராகி விட்டதாக அவரது விசுவாச வட்டத்தினர் சொல்கிறார்கள்.
அமைச்சர் பி.மூர்த்தியோ, முதல்வர் தனக்குக் கொடுத்த அசைன்மென்ட்டை முடித்துக் காட்டும் முகத்தான் மேற்கு தொகுதியில் ராஜுவை சமாளிக்க ‘சத்தான’ வேட்பாளரை தேடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் செல்லூராரோ, “உதயசூரியன்’ மேற்கில் ஒரு போதும் உதிக்காது, மறையத்தான் செய்யும். மேற்குத் தொகுதியில் சூரியன் மறைந்தது மறைந்ததுதான்” என்று டயலாக் பேசி உடன்பிறப்புகளுக்கு எதிராக ரத்தத்தின் ரத்தங்களை உசுப்பேற்றி வருகிறார்.