ராமேசுவரம்: இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னரும், தமிழ்ப் போராளிகள் புதைத்துவைத்த ஆயுதக் குவியல்களை அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தேடி, அழித்து வருகிறது. தமிழகத்திலும் இலங்கை தமிழ்ப் போராளிக் குழுக்கள் விட்டுச்சென்ற ஆயுதக் குவியல் முதன்முறையாக கடந்த 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பச்சமலைகாப்புக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, 2018 ஜூன்25-ம் தேதி ராமேசுவரம் அருகேதங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலும் கிணறு தோண்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, ஆயுதக் குவியல் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் புதைத்துவைத்திருப்பதாக ராணுவத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அகழ்வுப் பணிகளுக்கு கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும், நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் ராணுவத்தினர், போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர், கிராம அலுவலர், தொல்லியல் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இரண்டாவது நாளாக நேற்றும்அகழ்வுப் பணிகள் தொடர்ந்தநிலையில், எவ்விதமான ஆயுதங்களும் கண்டறியப்படவில்லை. இதனால் நேற்று மாலை பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் இன்று அகழ்வுப் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.