Home மாநில செய்திகள் முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில்...

முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில் அவலம்

0

தமிழக முதல்வர் காணொலியில் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்தநிலையில், சூரியனார்கோவிலில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலிருந்த பொருட்கள் மற்றும் கோப்புகளை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, புதிய கட்டிடத்தின் ஒரு அறையில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த மேற்கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன் கூறியது: கடந்த 14-ம் தேதியே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் இரு 2 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகிவிடும் என்பதால், ஊராட்சி மன்ற ஊழியர்கள், அலுவலக கதவை தாழிட்டுக் கொண்டு, அவசரகதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த 16-ம் தேதி இந்த அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்த நிலையில் நேற்று மற்றொரு அறையின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், யாரும் பார்வையிட வரவில்லை.

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்யின் தொகுதியில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் 3 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் 2 முறை பெயர்ந்து விழுந்துள்ளது வேதனைக்குரியது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற கட்டிடத்தை கட்டியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘சூரியனார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரையில் மின் விசிறி பொருத்தும்போது, மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. அது உடனடியாக சரி செய்யப்படும்’’ என்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version