பாலியல் வன்கொடுமைக்குள்ளான அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூலம் வெளியானது ஜீரணிக்க முடியாதது: பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

0
149

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொது வெளியில் வெளியானது ஜீரணிக்க முடியாத ஒன்று. அதை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்னை காவல்துறை இணை ஆணையராக பணியாற்றிய சரோஜ்குமார் தாக்கூர், ஆவடி சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.

அந்த குழு போக்சோ வழக்கை விசாரித்து இறுதி அறி்க்கை தாக்கல் செய்துள்ளது. அதேபோல், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் கசிய விடப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் பக்கெர்லா சிபஸ் கல்யாண் தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர்கள் சாந்திதேவி, பிரவீண்குமார் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வருகிறது.

மீண்டும் விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இதுதொடர்பாக 2 சீலிடப்பட்ட அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

மேலும், ‘‘அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், முக்கிய குற்றவாளியான சதீஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வி்ட்டது.

உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கில், வழக்கை திசைதிருப்ப, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரே பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை கசியவிட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குமூலம் வெளியானது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.

அத்துடன், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இழப்பீடு கோரி சிறுமியின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்தும் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

சட்டரீதியாக கடும் நடவடிக்கை: அதையடுத்து நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொதுவெளியில் வெளியானது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று மட்டுமல்ல, வேதனைக்குரியது, மோசமானது. எனவே, அதை பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி பொதுவெளியில் பரப்பியவர்கள் மீதும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை வரும் மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here