இரவு வாகன சோதனையின்போது தங்களை தாக்கி விட்டு தப்பிய வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, பரங்கிமலை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆலந்தூர் ஜிம்கோ கம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் போலீஸாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். பிடிக்க முயன்றபோது காவலர்களையும் தாக்கி விட்டு ஓடினர். இருப்பினும் அவர்கள் இருவரையும் போலீஸார் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களின் உடமைகளை சோதித்தபோது அவர்கள் 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில் பிடிபட்டது மதுரை உசிலம்பட்டி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கருப்பு என்ற மதுர கருப்பு (26), சென்னை ஈக்காட்டு தாங்கலைச் சேர்ந்த வீரமணி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பரங்கிமலை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் பிடிபட்ட கருப்பு மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என சுமார் 16 குற்ற வழக்குகளும், வீரமணி மீது திருட்டு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுஒருபுறம் இருக்க வாகன தணிக்கையில் சிறப்பாக செயல்பட்டு, கஞ்சா மற்றும் கத்தியுடன் இருந்த 2 நபர்களை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமைக் காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.