பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பும் ஏற்படவில்லை.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த போராட்டத்தால் நாடு முழுவதும் சகஜமான நிலையே இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஒடிசா, கேரளா, தமிழ்நாடு, கோவா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
ஒடிசாவில் நடைபெற்ற 12 மணி நேர போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்டது. இங்கு பொதுப் போக்குவரத்து முடங்கியது. மார்க்கெட்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதேபோல் கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவே தொடங்கியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாய தொழிலாளர் அமைப்புகள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதனால் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதைப் போலவே தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. ஆட்டோ, டாக்ஸிகளும் இயங்கவில்லை. கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.



