‘குக்கரில் 20 விசில் வந்தாலும் மட்டன் வேகவில்லை’ – பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார்

0
16

குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி எனும் ஊரை சேர்ந்தவர் சோதால ஹாஜி. இவர் நேற்று பரபரப்பாக ஒரு குக்கருடன் தாடிபத்திரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விவரம் கேட்டனர்.

அதற்கு, நான் ‘ஒரு கடையில் தலைக்கறி எடுத்தேன். அது 20 விசில் விட்டாலும் வேகவில்லை. என்னை கடைக்காரர் ஏமாற்றி விட்டார்.

அவர் மீது புகார் எடுத்து கொள்ளுங்கள் என கோபத்தில் கத்தினார். இந்த சத்தத்தை கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோஹன ராவ், ஹாஜியை தன்னிடம் வரவழைத்து, நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

உகாதி பண்டிகை கழிந்த பின்னர் எங்களது வீட்டில் கறி விருந்து உண்பது வழக்கம். அதன்படி, நான் தாடிபத்திரியில் உள்ள ஒரு கறிக் கடையில் தலைக்கறி வாங்கினேன். ஆனால், 20 விசில்கள் வைத்து பார்த்தும் அந்த தலைக்கறி வேகவே இல்லை. ஆதலால் எனக்கு சந்தேகம் வந்தது. அது தலைக்கறிதானா ? அல்லது வேறு ஏதாவதா ? என சந்தேகம் வருகிறது. நீங்கள் தான் அதனை விசாரிக்க வேண்டும் என கோபத்துடன் கூறினார்.

இதனை பொறுமையாக கேட்ட இன்ஸ்பெக்டர், அந்த கறிக்கடைக்காரரை அழைத்து வாருங்கள் என உத்தரவிட்டார். இதற்குள் இந்த விவகாரத்தை அறிந்த கறிக்கடைக்காரர், நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர், முதிர்ச்சி அடைந்த ஆடுகளால் ஒரு சில சமயம் இது போன்ற பிரச்சனைகள் வரும். ஆதலால் நான் வேறொரு ஆட்டின் தலைக்கறியை எடைக்கு எடை தருகிறேன்.

மேலும், என்னால் மன உளைச்சலுக்கு அவர் ஆளானதால், அவருக்கு ஒரு கிலோ மட்டன் இலவசமாகவே வழங்குகிறேன் என சமாதானத்திற்கு வந்தார். இதற்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டதால் திரும்பச் சென்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here