கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராய் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள சந்திப்பில் டி. வி. , மிக்ஸி போன்ற எலக்ட்ரிக் பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மணிக்குமார் (39). மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக அந்த வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த மணிக்குமார் தர்மராயின் கடைக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கடையின் காம்பவுண்டு சுவரை வெட்டி சேதப்படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தர்மராய் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து மணிக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.