‘குக்கர்’ தலைவர் அண்மைக் காலமாக எடக்கானவருக்கு எதிராக எக்ஸ்ட்ராவாக நான்கைந்து விசில்களை சேர்த்து அடித்து தாக்கி வருகிறார். அதன் காரணம் இதுதானாம். தடாகக் கட்சி தரப்பில் குக்கர் பார்ட்டிக்காக எடக்கானவரிடம் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், “அவர் தான் தேர்தலில் நிற்கவில்லை என்கிறாரே… அப்படி இருக்கையில் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமே?” என்று சமாதானம் பேசினார்களாம்.
அழுத்தம் தாங்காமல் அந்த சமாதானத்தை ஏற்கும் முடிவுக்கு வந்த எடக்கானவர், “அப்படியானால் அவரோட கட்சி ஆளுங்க நாலு பேருக்கு சீட்டக் குடுத்து இலையில நிக்க வைக்க அவரு சம்மதிப்பாரான்னு கேளுங்க” என்று சொன்னாராம். இதை அப்படியே குக்கர் கம்பெனிக்கு பாஸ் பண்ணினார்களாம் தடாகப் பார்ட்டிகள்.
இதைக் கேட்டு கொதித்த குக்கர் தலைவர், “என்னோட ஆளுங்கள இலையில நிக்கவெச்சு, எனக்குப் பின்னாடி நிக்கிற நாலு பேர அவருக்குப் பின்னால நிக்க வெச்சுடலாம்னு அவரு நினைக்கிறாரா?” என்று எகிறினாராம். இந்த எகிறலின் தகிப்பால் தான் எடக்கானவரை குக்கர் தலைவர் இப்போது எக்ஸ்ட்ரா விசில் அடித்து தாக்குகிறாராம்.














