வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கிறார். தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில், ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆண்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை கவிதா பாரதியும் தயாள் பத்மநாபனும் இணைந்து எழுதியுள்ளனர்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும்போது, “இது சாதாரண குற்றக் கதை அல்ல. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை, புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்யும் படம். வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக இது இருக்கும்” என்றார்.














