அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

0
230

வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை சிறப்பு நீதிமன்றம் செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் கடந்த 2008-ம்ஆண்டு வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.

இந்த வீட்டு மனைகளில் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி லாபம் சம்பாதித்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், அப்போதைய வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் முருகையா, ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், அமைச்சர் ஐ.பெரியசாமி, டி.உதயக்குமார் ஆகிய 7 பேர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ஊழல்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2019-ம்ஆண்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராகவில்லை. அவரது சார்பில் விலக்கு அளிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதையேற்ற நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதுதொடர்பான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுப் பதிவை செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here