பழனிசாமி தேடிய கோப்புகள்… எப்போதோ கிழித்துவிட்டேன் – டிடிவி தினகரன் திகில் வாக்குமூலம்

0
13

கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக-வின் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது பற்றி பழனிசாமிக்கு கவலை இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரோடு தான் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் 3-ம் இடத்துக்குச் செல்லும். 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும்.

பல கட்சிகள் கூட்டணிக்காக கடந்த 3 மாதங்களாக என்னை அணுகினார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவெடுக்க டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை ஆகும். இதற்கிடையில், சில புதிய மாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அமமுக இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும்.

எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை தமிழகம் முழுவதும் பலப்படுத்தி இருக்கிறோம். 2019, 2021 தேர்தல்களை விட இந்த முறை வலுவாக இருப்போம். அதனால் எங்களை தவிர்த்து விட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. இந்தத் தேர்தலில் பழனிசாமி என்ற துரோக சக்தி உறுதியாக வீழ்த்தப்படும். அவரை வீழ்த்திய பிறகு எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளோடு அதிமுக மறுமலர்ச்சி பெறுவதற்கு அமமுக முனைப்போடு செயல்படும்.

இன்றைய திமுக கூட்டணி பலமாக இருப்பதற்கு காரணமே பழனிசாமியின் அடாவடி நடவடிக்கைகள் தான். திமுக 2021-ல் ஆட்சிக்கு வருவதற்கும், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறவும் காரணமாக இருந்தவர் பழனிசாமி. அதிமுக-வுக்கு எதிராக அமமுக தொடங்கப்படவில்லை. பழனிசாமி எனும் துரோக சக்திக்கு எதிராக தொடங்கப்பட்டது.

நான் 1986-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுடன் நிழலாக இருந்து பணியாற்றியவன். எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடர்பாக உளவுத்துறையில் இருந்து வரும் கோப்புகள் போயஸ் கார்டனுக்கு வரும். சசிகலா சொன்னதின் பேரில் அதைபடித்துப் பார்த்து சிரித்துவிட்டு நானும் டாக்டர் வெங்கடேஷும் கிழித்துப் போட்டுஇருக்கிறோம். அதில் பல வண்டவாளங்கள் இருக்கும். அதை வைத்து யாரையும் பயமுறுத்த வேண்டும் என்ற கேவலமான எண்ணங்கள் என்னிடம் இல்லை.

அந்தக் கோப்புகள் கோடநாட்டில் இருக்கும் என்று யாரோ பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர். கோடநாடு கொலை யார் ஆட்சியில் நடக்கிறது… அப்போது சசிகலா ஜெயிலில் இருக்கிறார். என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். இதனால் அவர்களுக்கு பயம் அதிகமாகி இருக்கிறது. அதன் பிறகு நம் விவரங்களை தினகரன் வெளியில் விட்டுவிடலாம் என்று அஞ்சி இந்த செயலில் ஈடுபட்டனர். அவை எல்லாம் போயஸ் கார்டனில் தான் இருந்தது என்பதும், அதை எப்போதோ கிழித்துப் போட்டுவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இது தெரியாமல் பழனிசாமி கோடநாட்டில் போய் கோப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். என்றைக்குமே டிடிவி தினகரன் பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம் தான்.

என்னை யார் தடுத்தாலும் துரோகத்தை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். பழனிசாமி அதிமுகவை குடும்ப கட்சியாக நடத்துவதாக செங்கோட்டையன் சொல்வது உண்மைதான். அவரது மகனும், மருமகனும் எல்லோரையும் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். எங்களது வேட்பாளர்களை கூட அணுகி அதிமுகவுக்கு அழைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here