ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தும் வசதி திடீர் நிறுத்தம்

0
213

மின்வாரிய அலுவலகங்களில் ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை நேரடியாக செலுத்தும் வசதி கணினியில் முடக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பின்றி நடைமுறைப்படுத்துவதால் ஊழியர்களும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக மின்ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2024-ம் ஆண்டு தரவுகளின்படி 3.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன.

இதில், தாழ்வழுத்த மின்நுகர்வோர் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். இதில், ஒரு பகுதியினர் வங்கி, தபால் நிலையம், இ-சேவை மையம் மூலமாக மின்கட்டணம் செலுத்துகின்றனர். அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மின்நுகர்வோர் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்களில் நேரடியாக கட்டணம் செலுத்துகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக மின்வாரிய நிர்வாகம், மின்கட்டண வசூல் முறைகளில் எந்தவிதமான உத்தரவுகளும் வழங்காமல், முன்னறிவிப்பும் இல்லாமல் பிரிவு அலுவலகங்களில் உள்ள மின்கட்டண வசூல் தொடர்பான மாற்றங்களை வாய்மொழி உத்தரவின் மூலம் தன்னிச்சையாக மாற்றி வருகிறது. இது ஊழியர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் ஏழை, எளிய மக்கள் மின்கட்டணத்தை நேரடியாக செலுத்தி வரும் நுகர்வோரிடம், ஒரு மின் அட்டைக்கான கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருந்தால் பணமாகவும், காசோலை, வரைவோலை (டிடி) மூலமாகவும் மின் ஊழியர்கள் பெற்று வந்தனர். ரூ.10 ஆயிரத்துக்கு மேல் செலுத்த வரும் நுகர்வோரிடம் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்திட வலியுறுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில், மின்நுகர்வோரும் தான் விரும்பும் விதத்தில் மின்கட்டணத்தை செலுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களாக ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் செலுத்த வரும் மின்நுகர்வோரின் கட்டணத்தை பெறும் வசதி கணினியில் முடக்கப்பட்டது. அதேபோல் 2, 3 மின்கட்டண அட்டைகளின் மின்கட்டண தொகை ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வந்தாலும் அதுவும் செலுத்த முடியாமல் கணினியில் முடக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும் மின்நுகர்வோருக்கும் கணினியில் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மின்கட்டணம் செலுத்த வரும் மின்நுகர்வோர் கோபம் அடைந்து மின்கட்டண வசூல் மைய ஊழியர்களிடம் சண்டையிடும் நிகழ்வு ஆங்காங்கே நடக்கிறது. மின்கட்டணத்தை வாங்க மறுக்கும் ஊழியர்களிடம் வாரிய உத்தரவுகளை கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, மின்வாரிய தலைவர் மின்கட்டண வசூல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு முன்பு வாரிய உத்தரவுகளை வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here