ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலை – கோபாலபுரம் சந்திப்பில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்ற கார் ஒன்று அதே பகுதியில் `யு’ வளைவில் நேற்று காலை திரும்பியபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, கோபாலபுரத்திலிருந்து அவ்வழியே காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை கவனித்தார். உடனடியாக விரைந்து சென்று விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்த ரஞ்சித் குமார், இளங்கோ, கந்தன், மகேஷ் ஆகிய 4 பேருக்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி செய்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், உதயநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













