நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

0
197

மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் உள்ளிட்ட பலர், ‘மின்தடையால் தங்களால் நீட் தேர்வை மனநிறைவுடன் எழுத முடியவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சரியான பதிலை தேர்வு செய்ய முடியவில்லை. எனவே மறுதேர்வு நடத்தும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது’ என வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, ‘‘மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மின் தடையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் யாரும் அப்போது இதுதொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை.

அந்த தேர்வு மையங்களி்ல் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர் என்பதால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த முடியாது என்பதால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்’’ என்றார்.

பதிலுக்கு மனுதாரர்கள் தரப்பில், மின்தடை காரணமாக எந்த பாதிப்பும் இல்லை என்பதற்கும், போதிய வெளிச்சம் தேர்வு மையத்தில் இருந்தது என்பதையும் நிரூபிக்கும் வகையில் சிசிடிவி கண்காணி்ப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், எனக் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை ஜூன் 6-ம் தேதிக்கு (நாளை மறுநாள்) தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here