சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம், ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் பிப்.27-ல் வெளியாகி வரவேற்பைபெற்றது. இந்நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் பேசும்போது, “‘தாய் கிழவி’ படத்தை, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடைய கதையாக நினைத்து வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதையை ஆரம்பத்தில் இயக்குநர் சொல்லும்போது நான் சிரித்து ரசித்தேன். ஆனால், இதில் எனக்கு டக்கென்று பிடித்த காட்சி ஒன்று உண்டு. படத்தில் பால சரவணன், ராதிகாவிடம் கேட்பார்.
‘வாராவாரம் மதுரைக்கு போனியே, என்னதான் பண்ணுனே?” என்று. எனக்கும் அவர் என்ன பண்ணியிருப்பார் என்று ஆர்வமாக இருந்தது. ‘அங்க போய் ஏதாவது பணம் சம்பாதித்து இருப்பாரா, வேலை பார்த்திருப்பாரா? என்று யோசனை தோன்றியது. ஆனால், அவர் ஜாலியாக பொரிகடலை சாப்பிட்டுவிட்டு வருகிறார் என்றதும் எனக்கு ஒரு மாதிரி ஆனது.
ஏனென்றால் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நமக்கென்று வாழ்க்கையில 5 நிமிடமாவது செலவழிக்கிறோமா? என்று தோன்றியது. அந்த இடத்திலேயே முடிவு பண்ணிவிட்டேன், இந்தப் படத்தை தயாரித்தே ஆக வேண்டும் என்று.
முதலில் நம்மை நாம் சந்தோஷமாக வைத்துக்கொள்வதுதான் முக்கியம் என்று இந்தப் படத்தில் இயக்குநர் சொல்லும்போது, மகிழ்ச்சியாக இருந்தது. அப்போதிருந்து, நல்ல படம் பண்ணப் போகிறோம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இது, என் வாழ்க்கையில் பலரை ஞாபகப்படுத்திய படம்.
ராதிகா மேடம் நடித்த பவுனுத்தாய் கதாபாத்திரத்தில், என் அம்மா தெரிந்தார், என் அக்கா, என் மனைவி ஆர்த்தி ஆகியோரை பார்த்தேன். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற அம்மாக்களுக் கும் அக்காள்களுக்கும் தங்கச்சிகளுக்குமான சமர்ப்பணமும் தான் இந்த தாய் கிழவி படமும் வெற்றியும்” என்றார். மேடையில் எஸ்கே புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் 10- வது படத்தின் இயக்குநர் அம்மாமுத்து சூர்யாவை அறிமுகப்படுத்தினார்.














