ஹைதராபாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாண்டூருவிலிருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு தெலங்கானா அரசு பேருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்தனர்.
சரியாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்ஜகூடா எனும் இடத்தில், ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக எதிரே வந்த டிப்பர் லாரி, அரசு பேருந்தின் ஓட்டுநர் உள்ள வலது புறம் மோதி, பேருந்தின் மீதே கவிழ்ந்தது. அப்போது, டிப்பர் லாரியில் இருந்த ஜல்லி கற்கள் முழுவதும் பேருந்துக்குள் விழுந்தது. இந்த கோர விபத்தில் இரு வாகன ஓட்டுநர்கள், 10 பெண்கள், 11 மாத குழந்தை, 8 ஆண்கள் என மொத்தம் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த நேரத்தில் 12 போலீஸார் பயிற்சிக்காக ஒரு வேனில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இந்த விபத்தை பார்த்ததும், ஓடி சென்று, மீட்பு பணியில் இறங்கினர்.
போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும், அப்பகுதி மக்கள் பலர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லி கற்களை அகற்றி, அதில் சிக்கியிருந்த பலரது உடல்களை மீட்டனர். கிரேன் உதவியோடு டிப்பர் லாரி அகற்றப்பட்டது.
தெலங்கானா அரசு சார்பில் உயிரிழந்த பயணிகள் 19 பேரின் குடும்பங்களுக்கு (ஓட்டுநர்கள் இல்லாமல்) தலா ரூ.5 லட்சம் நிதி உதவியையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியையும் அரசு வழங்கும் என அமைச்சர் பொன்னம் பிரபாகர் அறிவித்தார். மேலும், போக்குவரத்து கழகம் சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்
பெற்றோரை இழந்த 2 மகள்கள்: இந்த விபத்தில் விகாராபாத் மண்டலம், ஹாஜிப்பூரை சேர்ந்த தாய், தந்தை இருவரையும் இழந்த 2 மகள்கள் கதறி அழுதனர்.
            













