முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடியில் கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் மும்மத அடையாளங்களுடன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடி செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர்.முரளி சார்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரங்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னாலான எம்ஜிஆரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக யாக சாலைகள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, வருண பகவான் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கோபுரத்துக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,
எம்ஜிஆர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் சேகர் ரெட்டி, பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.














