Home தேசிய செய்திகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஜார்க்கண்டில் குதிரையில் பயணிக்கும் ஆசிரியர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஜார்க்கண்டில் குதிரையில் பயணிக்கும் ஆசிரியர்

0

ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார்.

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில் மே 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை மாநில அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில் கர்வா மாவட்டம், துர்கி ஒன்றியம் தட்டிதிரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் முன்னா பிரசாத் குப்தா (43). இவர், வீடுகள் பட்டியல் தயாரித்தல் மற்றும் கணக்கெடுப்பு பணிக்காக மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக தனது குடும்பத்தின் பழைய குதிரையை தேர்ந்தெடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படும் நிலையில் இவர் குதிரையில் சென்று வருகிறார்.

இதுகுறித்து முன்னா பிரசாத் குப்தா கூறுகையில், “பெட்ரோல் எளிதில் கிடைப்பதில்லை. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதனால் வரிசையில் நின்று நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, மாற்று வழி பற்றி யோசித்தேன். இந்த குதிரை பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் இருந்து வருவதால் அதில் செல்ல முடிவு செய்தேன்” என்றார்.

வெள்ளை சீருடை மற்றும் அரசால் வழங்கப்பட்ட ‘சென்சஸ்’ தொப்பி அணிந்த குப்தா, தனது முதுகில் கணக்கெடுப்புப் பொருட்களுடன் ஒரு பழுப்பு நிறக் குதிரையில் கிராமப் பாதைகள் வழியாகச் செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மோட்டார் சைக்கிளில் எளிதில் செல்ல முடியாத குறுகிய மண் சாலைகள் வழியாக மட்டுமே இணைக்கப்பட்டுள்ள வீடுகளை அடைவதற்கு குப்தாவுக்கு குதிரை பயனுள்ளதாக உள்ளது.

குப்தாவின் குடும்பம் பாரம்பரியமாக குதிரைகளை பயன்படுத்தி வரும் நிலையில் குப்தா தனது தந்தையிடமிருந்து குதிரையேற்றம் கற்றுக்கொண்டுள்ளார். அவர் கிராமங்களுக்கு குதிரையில் செல்வது அங்குள்ள குழந்தைளை மிகவும் ஈர்க்கிறது.

“2018 அல்லது 2019-க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் குதிரைகளை படங்கள் மூலமாகவே அறிந்திருக்கிறார்கள். அவர்கள் குதிரையை நேரடியாக, அதன் அருகில் சென்று பார்ப்பதால் மிகவும் உற்சாகம் அடைகின்றனர்” என்கிறார் குப்தா.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version