இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் விளாசினர். அதேவேளையில் இலங்கை அணி 79.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்வெல்லா 80 ரன்கள் சேர்த்தனர்.
178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 48.5 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 69 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 20-வது அரை சததமாக அமைந்தது. தேவ்தத் படிக்கல் 75 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், கே.எல்.ராகுல் 47 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும் சேர்த்தனர்.
மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0, கேப்டன் ஷுப்மன் கில் 8, துருவ் ஜூரெல் 7, ரவீந்திர ஜடேஜா 9, மானவ் சுதார் 9, குல்தீப் யாதவ் 5, பிரசித் கிருஷ்ணா 2 ரன்களில் நடையை கட்டினர். முகமது சிராஜ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4, பிரபாத் ஜெயசூரியா 3, லகிரு குமரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 372 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ 27 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் வீசிய ஷார்ட் பாலை ஹூக் ஷாட் விளையாட முயன்ற போது டீப் ஃபைன் லெக் திசையில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய பசிந்து சூரியபண்டாரா சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டை மானவ் சுதார் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 12 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய லகிரு உதரா 58 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் கல்லி திசையில் நின்ற துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வாவுடன் இணைந்த சோனல் தினுஷா பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது.
கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 73 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், சோனல் தினுஷா 36 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 2 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கைவசம் 6 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 288 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
‘சிக்ஸரில் சதம்’
இலங்கை அணிக்கு எதிராக காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் நேற்று ரிஷப் பந்த் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதுவரை சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் 100 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். மேலும் குறைந்த போட்டிகளில் 100 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர், நிகழ்த்தினார்.
இந்திய வீரர்கள் இதற்கு முன்னர் வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 91 சிக்ஸர்கள் விளாசியிருந்தனர். அதே வேளையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 82 டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது 51 டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்களை விளாசி முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் ரிஷப் பந்த்.
சந்திமால் காயம்
காலே டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று பீல்டிங்கின் போது எல்லைக்கோட்டுக்கு அருகே
இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் பந்தை தடுக்க பாய்ந்த போது தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் காயம் அடைந்தார். இதையடுத்து கன்சன் பதிலி வீரர் விதியின் கீழ் அவருக்கு பதிலாக பசிந்து சூரிய பண்டரா களமிறக்கப்படார். இதற்கு நடுவரும் அனுமதி வழங்கினார்.
டெஸ்ட் அரங்கில் 100 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்
1.பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) – 138
2.பிரண்டன் மெக்கலம் (நியூஸிலாந்து) – 107
3.ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) – 100*
4.ரிஷப் பந்த் (இந்தியா) – 100
