தமிழ் ஓலைச் சுவடிகளும் முன்முயற்சியும்: பிரதமர் பாராட்டுக்கு மணி.மாறன் நன்றி 

0
126

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

அதில், “இந்​திய கலாச்​சா​ரத்​தின் மிகப் ​பெரிய ஆதா​ரம் நமது பண்​டிகைகளும், நமது பாரம்​பரி​யங்​களும்​தான். பல நூற்​றாண்​டு​களாக ஓலைச்​சுவடிகளில் பாது​காக்​கப்​பட்​டிருக்​கும் ஞானம் நமது மிகப்​பெரிய சொத்​தாகும். இந்த ஓலைச்​சுவடிகளில் விஞ்​ஞானம் உள்​ளது, சிகிச்சை முறை​கள் உள்​ளன. இசை, தத்​து​வம் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் நிறைந்திருக்கின்றன.

பாரம்​பரிய ஞானத்தை போற்றி பாது​காப்​பது நமது பொறுப்​பாகும். தமிழ்​நாட்​டின் தஞ்​சாவூரை சேர்ந்த மணி.மாறன் இந்த பணியில் ஈடுபட்​டிருக்​கிறார். தமிழில் இருக்​கும் ஓலைச்​சுவடிகளை இளம்​தலை​முறை​யினர் படித்து கற்​றுக் கொள்​ள​வில்லை என்​றால் விலைமதிப்பில்​லாத மரபுச் செல்​வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கரு​தி​னார். இதற்​காக அவர் மாலைநேர வகுப்​பு​களை தொடங்​கி​னார்.

தமிழ்ச் சுவடிகளை எவ்​வாறு படிப்​பது, புரிந்து கொள்​வது என்பது குறித்து மணி.மாறன் கற்​பித்​தார். அவரது வழி​காட்​டு​தலால் ஏராள​மான மாணவர்​கள் ஓலைச்​சுவடிகளை கற்​கும் அறி​வில் தேர்ச்சி பெற்று உள்​ளனர். இப்​படிப்​பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் நடை​பெற்​றால் நமது பண்​டைய ஞானம் நான்கு சுவர்​களுக்​குள் முடங்கி கிடக்​காமல், புதிய தலை​முறையினரை சென்றடை​யும்.

இந்த சிந்​தனை​யால் உத்​வேகம் அடைந்து நடப்​பாண்டு மத்​திய பட்​ஜெட்​டில் ‘ஞான பாரத இயக்​கம்’ என்ற திட்​டம் அறிவிக்கப்பட்டது. புதிய இயக்​கத்​தின்​படி, பண்​டைய சுவடிகள் டிஜிட்​டல்​மய​மாக்​கப்​படும். ஒரு தேசிய டிஜிட்​டல் சேமிப்​பகம் உரு​வாக்​கப்​படும். இதன்​மூலம் உலகம் முழு​வதும் உள்ள மாணவர்​கள், ஆய்​வாளர்​கள்​ இந்​தி​யா​வின்​ ஞான பாரம்​பரி​யத்​தோடு தங்​களை இணைத்​துக்​ கொள்​ள முடி​யும்​” என்று பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

மணி. மாறன் கூறியதாவது: நான் தமிழ்ப் பண்டிதராக பணிக்கு வந்த 10 ஆண்டுகளில், தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயற்சியை அளித்துள்ளேன். தமிழகத்திலும், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் புதைந்து கிடந்த சிற்பங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வெளி உலகத்துக்கு கொண்டு வந்துள்ளேன். தற்போது ஏடகம் என்ற அமைப்பை உருவாக்கி, இலவசமாக பலருக்கு சுவடிகள் படிப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறேன்.

இதனால், வரலாறு, தொல்லியல் சார்ந்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். பொதுமக்களுக்கும் வரலாறு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை உலகம் முழுக்க அறிய செய்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்துள்ளது. இவ்வாறு மணி. மாறன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here