ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 201 ரன்களும், விமல் குமார் 189 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 127 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்தது. தேகா நிஸ்சல் 161 ரன்களும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்களில் 446 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தேகா நிஸ்சல் 175 ரன்களும், இம்லிவதி லெம்தூர் 146 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 5, சந்திரசேகர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். நாகாலாந்து அணி இன்னிங்ஸ் முடிவடைந்ததும் ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளின் கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.
பெங்கால் வெற்றி: பெங்கால் – குஜராத் அணிகள் இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 327 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி 45.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் 124 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜெய்மீத் படேல் 45, ஆர்யா தேசாய் 13 ரன்கள் சேர்த்தனர்.
6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். பெங்கால் அணி தரப்பில் முகமது ஷமி 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 38 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார். முதல்தர கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி 4 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஷாபாஷ் அகமது 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி முழுமையாக 6 புள்ளிகளை பெற்றது.
அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
செய்தித்துளிகள்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
2028-ம் ஆண்டு ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப், 2026-ம் ஆண்டு ஆசிய தொடர் ஓட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமையை கோரியுள்ளது இந்திய தடகள சங்கம். இதில் உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் வரும் டிசம்பர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் டபிள்யூடிடி பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான தியா சித்லே-மனுஷ் ஷா ஜோடி தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் 7-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சென்னை அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த பி.பி.அபிநந்தும், மகளிர் பிரிவில் எஸ்.கே.அகாடமியை சேர்ந்த எஸ்.யாஷினியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
யு-20 மகளிர் கால்பந்து நட்புரீதியிலான போட்டியில் இந்தியா – கஜகஸ்தான் அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.














