‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகியுள்ளது’ என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது.
இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது.
திமுக அரசு சார்பில், 44-வது செஸ் ஒலிம்பியாட், சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயம், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, உலகளவில் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் தமிழகம் முக்கியமான விளையாட்டு களமாக மதிக்கப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சிகள் பெற உதவித் தொகை, தங்கும் இடவசதி, போட்டிகளில் பங்கேற்க வெளி ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவரும் பயணச் செலவு, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பரிசுகள், ஊக்கத்தொகைகள் அனைத்தும், போட்டிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
சிறந்த வெற்றிகளை ஈட்டி தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் புகழ் தேடித்தரும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் ஊதியத்துடன் பணி நியமனம் வழங்கப்படுகிறது. மூன்று சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 5 ஆண்டுகளில் 70 மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 301 விளையாட்டு வீரர்கள் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதே போல், சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து, 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைள் மூலம், ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழகம்’ என இன்று பெற்றுள்ள புகழ், நாளை ‘உலகின் விளையாட்டுத்தலைநகரம் தமிழகம்’ என்னும் பெருமையையும் புகழையும் ஈட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














