தாம்பரம் தாலுகாவில் உள்ள கோவிலாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக்கூறி திருநின்றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்பவர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலரான ஜி.பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த டி.சினேகா, பரங்கிமலை பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், தாம்பரம் தாலுகா வட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன், அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.ரமன்லால் ஆகியோர், “கோவிலாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என வாதிட்டனர்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், “ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்துக்குள் அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தால் அந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடோ அல்லது மறுஆய்வு மனுவோ தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் எதுவுமே செய்யாமல் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் தங்களது பொறுப்பை வெறுமனே தட்டிக் கழிக்கக்கூடாது” என அறிவுறுத்தினர்.
மேலும், “இந்த வழக்கில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், செங்கல்பட்டு ஆட்சியரை விடுவிக்கிறோம். தாம்பரம் வட்டாட்சியர் மற்றும் பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். அவர்கள் 4 வார காலத்துக்குள் இந்த தொகையை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக்கூறி கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், விருத்தாசலம் வட்டாட்சியர் அரவிந்தன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கையும் விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விருத்தாசலம் வட்டாட்சியர் அரவிந்தனுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.












